பாப்பா பாட்டு
குழந்தை களுக்காக மகரிஷி இயற்றியது.
சின்ன வயது குழந்தைகளே!
சீக்கிரம் காலையில் எழுந்திருங்கள்!
அன்னை தந்தை இருவருக்கும்,
அன்பாய் வணக்கம் செலுத்துங்கள்!
பல்லைத் துலக்கி முகங்கழுவிப்
பரமனை மனதில் நினையுங்கள்!
எல்லையில்லா ஆனந்தம்
எழுந்திடும் உங்கள் இளம்நெஞ்சில்.
உள்ளத்தன்பால் உருக்கமுடன்
உங்கள் ஆசான் போதித்த,
பள்ளிகூடப் பாடத்தைப்
படிக்கவேண்டும் இருதடவை.
வீட்டுக் கணக்கைப் போட்டுப்பின்
விடைகள் சரியா எனப்பாரீர்!
நாட்டுக் குழைத்த நல்லோரின்
நினைவை என்றும் மறவோமே!
அம்மா கொடுக்கும் ஆகாரம்;
அளவாய் உண்ண வேண்டும்அதை;
சும்மா அதிகம் சாப்பிட்டால்
சுகத்தைக் கெடுக்கும்; அறிந்திடுவோம்.
நேரம் தள்ளிப் போகாமல்,
நினைவாய்ப் பள்ளிக்கூடம் போய்,
ஆரம்பிக்கும் முன்னாலே
அமர்ந்திட வேண்டும் இடத்தினிலே.
ஊக்கத்தோடு படித்தோர்கள்
உயர்ந்தோரானார் பலர்; அந்த
நோக்கத்தோடு கல்விதனை
நன்றாய் கற்றுத் தேர்ந்திடுவோம்!
தினமும் மாலை வேளையிலே
திறமையாகப் பலர் கூடி,
மனமும் உடலும் நலமடைய
மகிழ்ச்சியோடு ஆடிடுவோம்!
அந்திவேளை மேற்குப் புறம்
ஆகாயத்தைப் பார்த்திடுவோம்!
விந்தையாக மேகங்கள்
விதவிதமாகத் தோன்றிடுமே!
இரவு வேளை வானத்தில்
எங்கும் நட்சத் திரமயமே!
பரவி மினுக்கு மினுக்கென்று
பார்க்க அழகாய்க் காட்சிதரும்!
நிலவு இருக்கும் இரவுகளை
நினைக்க நினைக்க ஆனந்தம்!
உலவி மேகம் சிலநாளில்
உள்ளக் களிப்பை விளைவிக்கும்!
அம்மா அப்பா வளர்க்கின்றார்;
ஆசான் படிப்பைத் தருகின்றார்;
சும்மா வானம் பூமி இவை
சுகத்தைத் தருகின்றது எல்லோர்க்கும்.
இறைநிலை என்ற பேராற்றல்
எங்கும் உளது நீக்கமற;
மறைவாய் இருந்து அதுஆற்றும்
மாபெரும் செயலை நினைத்திடுவோம்!
உணவை உண்போம் நாள்தோறும்,
உடலாய் அதனை மாற்றுவதார்?
கணமும் நம்மைப் பிரியாமல்
கருத்தாய் இருந்து ஊக்குவதார்?
உலகம் நிலவு சூரியன்கள் உயிர்கள்
அனைத்தும் படைத்தது யார் ?
பலவும் ஒழுங்காய் முறைபிறழா பாங்கில்
இயக்கி வருவது யார் ?
அவரே தெய்வம்; பேராற்றல்;
அறிவைக் கொண்டே வணங்கிடுவோம்!
எவரும் அவரின் அருளாலே
இன்பம் பெற்று வாழ்கின்றார்.
- வேதாத்திரி மகரிஷி
Comments
Post a Comment