திருக்குறளில் உழவின் பெருமை

 உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!!


#உழவு - #உழவின்பெருமை:


குறள் வரிசை

1031

1032

1033

1034

1035

1036

1037

1038

1039

1040


குறள்:1031

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

குறள் விளக்கம்:

உலகத்தவர் பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் உணவின் பொருட்டு உழவரையே எதிர்பார்பர்; ஆகையால், எவ்வளவுதான் துன்பம் அடைந்தாலும் உழவே தலையாய தொழில்.


குறள்:1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

குறள் விளக்கம்:

உழவுத்தொழிலைச் செய்யாமல் பிறதொழில்களின் மேல் செல்கின்றவர்களையெல்லாம் தாங்குதலால், உழவர்களே உலகத்தவராகிய தேருக்கு அச்சாணி போன்றவராவர்.


குறள்:1033

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

குறள் விளக்கம்:

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.


குறள்:1034

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.

குறள் விளக்கம்:

உழுதலால் தானிய வளம் உடைய உழவர், உலகம் முழுவதிலுமுள்ள பல அரசர் நாட்டையும் தமது அரசரின் குடைக்கீழாகக் காண்பர்.


குறள்:1035

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.

குறள் விளக்கம்:

தமது கையால் உழுகின்றவர் பிறரை இரக்கமாட்டார்; இரப்பவர்க்கு வேண்டியவற்றை ஒளிக்காமல் கொடுப்பர்.


குறள்:1036

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.

குறள் விளக்கம்:

உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.


குறள்:1037

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.

குறள் விளக்கம்:

ஒரு பலம் புழுதி, கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செழித்து விளையும்.


குறள்:1038

ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.

குறள் விளக்கம்:

நிலத்தில் உள்ள பயிருக்கு உழுவதைவிட உரம் இடுதல் நல்லது, இவ்விரண்டுஞ்செய்து களை பிடுங்கிய பின்னர், அதனைக் காத்தல், தண்ணீர் பாய்ச்சுவதைவிட நல்லது.


குறள்:1039

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.

குறள் விளக்கம்:

நிலத்திற்கு உரியவன் சென்று நிலத்தைப் பார்க்காதிருந்தால் நிலம் மனைவியைப் போல் வெறுத்துப் பிணங்கிவிடும்.


குறள்:1040

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.

குறள் விளக்கம்:

தம்மிடம் பொருளில்லை என்று சொல்லிச் சோம்பி இருப்பவரைக் கண்டால், நிலம் என்று சொல்லபடுகின்ற நல்லவள் அவரது அறிவின்மையைக்கண்டு தன்னுள்ளே சிரிப்பாள்.

நன்றி 

#வயலும்வரப்பும்

Comments

Popular posts from this blog

TNTEU - B.ED STUDY MATERIALS FOR FIRST YEAR (ENGLISH )

TNTEU - B.ED FIRST YEAR TAMIL STUDY MATERIALS

PEDAGOGY OF Mathematics part 2 study material