இள நெஞ்சில் எழுச்சி தீபமே ஆசிரியர் லட்சியம்!


                         

    ஆசிரியர்கள் மீதும் தீராத அன்புள்ளம் கொண்டுள்ளவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம்.
              எதிர்கால இந்தியா இன்றைய மாணவர்களை நம்பி உள்ளது என்பதில் மாற்றிக்கருத்து இல்லாதவர். மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமின்றி பாடமாகவும் ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்பது அவரது ஆழ்ந்த கருத்து.

ஒரு சிற்பி வெரும் சிற்பியாக மட்டுமே வாழ்ந்திருந்தால் நூற்றுக்கணக்கில் சிற்பங்களை மட்டுமே உருவாக்கி இருப்பர். அந்த சிற்பி ஆசிரியர் குணநலன் கொண்டு அக்கலையை மற்றவர்களுக்கு கற்பித்தால் ஆயிரக்கணக்கான சிற்பிகளை உருவாக்கி அதன்மூலம் லட்சக்கணக்கான சிற்பங்களை செதுக்கி இருக்க முடியும். அதுவே ஆசிரியர் பணி.

அத்தகைய ஆசிரியர் கொண்டிருக்க வேண்டிய குணநலன்கள் குறித்து டாக்டர் அப்துல்கலாம் எழுதுகிறார்...

பள்ளிகள், கல்லூரிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரியர் தின நிகழ்ச்சிகளின் போது, கடந்த ஏழு ஆண்டுகளில் ஏறத்தாழ 30 லட்சம் மாணவர்களையும் 2 லட்சம் ஆசிரியர்களையும் சந்தித்திருக்கிறேன்.

நான் ஆசிரியர்களை சந்திக்கும் போ தெல்லாம் அவர்களுக்கு ஏழு அம்ச உறுதிமொழியை பிரமாணம் செய்து வைத்திருக்கிறேன். அது கற்பித்தல் மற்றும் கற்றல் ஆகிய இரண்டுக்கும் நம் கல்விமுறையில் உள்ள தொடர்பை விவரிக்கிறது. அந்த உறுதிமொழிகளுக்கான விளக்கத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

1. எல்லாவற்றுக்கும் முதலாவதாக நான் சொல்லிக் கொடுப்பதை விரும்புகிறேன். கற்பித்தல்தான் என் ஆன்மா.
2. மாணவர்களை செம்மைப்படுத்துவது மட்டுமே என் பொறுப்புகளாக கருதாமல் எதிர்காலத்தின் ஆற்றல் வளமாக கருதப்படும் இளம் உள்ளங்களை எழுச்சி பெற செய்வதும் பொறுப்பு என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆசிரியர் தொழிலின் லட்சியத்துக்கு பொறுப்புள்ளவனாக நடந்து கொள்வேன்.
3. சிறப்பான பயிற்சி மூலம் சராசரி மாணவரை கூட மிகச்சிறப்பாக படிக்கும் மாணவராக மாற்றும் மிகச்சிறந்த ஆசிரியராக என்னை நான் கருதிக் கொள்வேன்.
4. மாணவர்களுடன் எனது நடவடிக்கைகள் அனைத்தும் தாய், சகோதரி, தந்தை, சகோதரனுக்குரிய அன்பு மற்றும் அக்கறையிலேயே அமையும்.
5. என்னுடைய வாழ்க்கையே மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் வகையில் நான் நடந்து காட்டுவேன்.
6. என்னுடைய மாணவர்களை நான் கேள்வி கேட்க ஊக்கப்படுத்துவேன். அதன் மூலம்தான் ஆராய்ச்சி மனப்பாங்கு அவர்களிடம் வளரும் என்பதையும் அறிவார்ந்த குடிமக்களாக அவர்கள் உருவாவார்கள் என்பதையும் நான் அறிவேன்.
7. எல்லா மாணவர்களையும் நான் சமமாக நடத்துவேன், மதம், ஜாதி, மொழி அடிப்படையில் எந்த பாகுபாடும் பார்க்க மாட்டேன்.
8. நான் தொடர்ச்சியாக திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம்தான் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன். 
9. என் மாணவர்களது வெற்றியை நான் அகம் மகிழ்ந்து கொண்டாடுவேன்.
10. நான் ஆசிரியராக இருப்பதை உணர்கிறேன். தேசிய வளர்ச்சியில் எனக்கும் பங்கு உண்டு என்பதை உணர்கிறேன்.
11. நல்ல சிந்தனைகளால் என் மனதை நிரப்புவேன். நல்லதையே செய்வேன், நல்வழியிலேயே நடப்பேன்.

1936 - 1957 ஆண்டுகளில் நான் படித்த காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஓரிரண்டு மிகச்சிறந்த ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தார்கள். 1936ம் ஆண்டு ராமேஸ்வரம் பஞ்சாயத்து பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, ஆசிரியர் முத்து அய்யர் என் மீது தனி ஆர்வம் செலுத்துவார். அதற்கு காரணம் வகுப்பில் கொடுக்கப்படும் பயிற்சிகளை நான் சிறப்பாக செய்வேன்.

அவர் எங்கள் வீட்டுக்கே வந்து, என் தந்தையிடம் உங்கள் மகன் நல்ல மாணவன் என்று கூறிவிட்டு சென்றார். என் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். என் தாயார் எனக்கு இனிப்பு வழங்கினார்கள். ஒரு நாள் நான் பள்ளிக்கு செல்லவில்லை. இதைப் பார்த்த முத்து அய்யர் நேராக எங்கள் வீட்டுக்கு வந்து, என் தந்தையிடம் என்ன விபரம் என்று கேட்டார். காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்ததால் பள்ளிக்கு செல்லவில்லை என்பதை அவரிடம் என் தந்தை கூறினார்.

என்னுடைய கையெழுத்து மோசமாக இருப்பதைப் பார்த்த முத்து அய்யர் மூன்று பக்கங்கள் கொடுத்து பயிற்சி செய்யும்படி கூறினார். என் தந்தையிடம் கையெழுத்தை கவனித்து வருமாறு கேட்டுக் கொண்டார். பின்னாளில் முத்து அய்யரைப் பற்றி என் தந்தை கூறிய போது, என்னை உருவாக்கியதும் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்ததும் அவர்தான் என்பது தெரியவந்தது.

1954-57ம் ஆண்டில் நான் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி.,) ஏரோநாட்டிக்கல் பிரிவில் படித்துக் கொண்டிருந்த போது, சிறியவகை தாக்குதல் விமானத்தை வடிவமைக்கும் திட்டம் எனக்கு வழங்கப்பட்டது. ஒரு குழுவினராக இணைந்து நாங்கள் செயல்பட்டு வடிவமைப்பை ஒருங்
கிணைக்கும் பொறுப்பும் எனக்கு அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். என்னுடைய திட்டத்தைப் பார்த்து தெளிவில்லாமல் இருப்பதாகவும் அதனால் அவர் ஏமாற்றம் அடைந்ததாகவும் தெரிவித்தார். வெவ்வேறு குழு உறுப்பினர்களிடமிருந்து நான் தகவல்களைப் பெற்று ஒன்றிணைக்க முடியாததால் அதை செய்து முடிக்க அவரிடம் நான் ஒரு மாதம் அவகாசம் கேட்டேன். இவற்றையெல்லாம் அவர் காது கொடுத்து கேட்கவில்லை.

‘இன்று வெள்ளிக்கிழமை. திங்கள் கிழமை காலைவரை நான் மூன்று நாள் அவகாசம் தருகிறேன். அதற்கு விமான வடிவமைப்பை முடிக்கவில்லை என்றால் ஸ்காலர்ஷிப் ‘கட்’ ஆகிவிடும்’ என்று கடுமையாக கூறிவிட்டார். இவ்வாறு அவர் சொன்னது எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

ஏனெனில் ஸ்காலர்ஷிப்பை நம்பித்தான் என் படிப்பு இருந்தது. வேறு வழியில்லை அந்த திட்டத்தை முடித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. என் குழுவினர் இரவு பகலாக உழைத்தால்தான் முடிக்க முடியும் என்பதை உணர்ந்தார்கள். நாங்கள் அன்று இரவு தூங்கவே இல்லை.  சாப்பிடவும் இல்லை. சனிக்கிழமை ஒரே ஒரு மணிநேரம் மட்டுமே ஓய்வு எடுத்தோம்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் நாங்கள் ஏறத்தாழ வடிவமைப்பை முடிக்கும் நிலையில் இருந்தோம். ஆய்வுக்கூடத்தில் யாரோ நிற்பது போல் உணர்வு. திரும்பிப் பார்த்தால் அவர் பேராசிரியர் சீனிவாசன். ‘உங்களை நிர்பந்தம் செய்து, காலக்கெடு நிர்ணயித்ததால்தான் இப்போது சிறந்த வடிவமைப்பு கிடைத்துள்ளது’ என்று எங்களை பாராட்டினார்.

ஏதாவது நெருக்கடி அளிக்கும் பட்சத்தில்தான் நமது சிந்தனை செயல்படத் துவங்குகிறது. திறமையை உருவாக்க இது ஒரு யுக்தி என்பதை நான் அப்போது அறிந்தேன். மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதையே  ஆசிரியர்கள் தங்கள் லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும்.


உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

TNTEU - B.ED STUDY MATERIALS FOR FIRST YEAR (ENGLISH )

TNTEU - B.ED FIRST YEAR TAMIL STUDY MATERIALS

PEDAGOGY OF Mathematics part 2 study material