உலக புலிகள் தினம்
மனிதன் புலியைக் கொன்றால், அதை ஒரு விளையாட்டு என்கிறோம். அதுவே, ஒரு புலி மனிதனைக் கொன்றால், அதனைக் காட்டுமிராண்டித்தனம் என்கிறோம்.’ இது அறிஞர் பெர்னார்ட்ஷா சொன்னது.
காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றாலும், இந்த வார்த்தைகளுக்கான தேவை மட்டும் குறையவேயில்லை
புலிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,000 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது.
புலிகள் இருந்தால் தான், காடு பாதுகாப்பாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும். புலி இருந்தால், அங்கு புள்ளி மான், யானைகள் அதிகளவில் இருக்கும். உணவுக்கு மான் போன்ற விலங்கினங்கள் இல்லாத போது புலிகள் நாட்டிற்கு உள்ளேயும் ஊடுருவுகின்றன.
இந்தியாவின் தேசிய விலங்கு புலி. அது மட்டும் அல்லாமல் பங்ளாதேஷ், மலேசியா மற்றும் தென் கொரியா நாடுகளிலும் புலி தான் தேசிய விலங்கு.
உலகில் முன்பு 8 வகையான புலிகள் இருந்துள்ளன. அவற்றில் தற்போது எஞ்சியவை 5 இனங்கள் மட்டுமே. இந்த இனங்களில் தற்போது 4 ஆயிரத்து 600 முதல் 7 ஆயிரத்து 200 புலிகள் மட்டுமே உலக காடுகளில் உள்ளன.
அது சரி.. காடுகளில் உள்ள புலிகளை எப்படிக் கணக்கிடுவது? ஆரம்பத்தில் புலிகளின் காலடித் தடங்களை வைத்துக் கணக்கிட்டனர்.ஒவ்வொரு புலிக்கும் காலடித் தடம் ஒவ் வொரு விதமாக இருக்கும். எனினும் இது சரியான முறை என்று கூற முடியாது. ஆகவே சமீபத்திய கணக்கெடுப் பின் போது Trap Camera முறை பின்பற்றப்பட்டது.
அதாவது புலிகள் மீதான வரிகள் ஒவ்வொரு புலிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். காடுகளில் ஆங்காங்கு தானியங்கி காமிராக்களை நிரந்தரமாகப் பொருத்தி விட்டுப் பின்னர் காமிராவில் பதிவான படங்களை வைத்து புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.
இந்தியா விடுதலை அடைந்து நீண்ட காலத்துக்குப் பிறகு 1970 ஆம் ஆண்டில் தான் புலி வேட்டை மீது மத்திய அரசு தடை விதித்தது.
1972 ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1973ல் புலிகள் காப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
1972-ம் ஆண்டு, இந்திய காடுகளில் வாழும் புலிகளின் வாழ்விடங்களை காப்பகங்களாக அறிவித்து புலிகள் பாதுகாக்கப் படுகின்றன.
இந்த வகையில், தற்போது இந்தியாவில் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் முக்கியமானவை
புலிகள் மற்றும் யானைகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்பினால், பல ஆண்டுகளாக மனிதர்கள் புலிகளை சட்ட விரோதமாக வேட்டையாடி வந்தனர். இதன் காரணமாக புலிகள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகள் அழிகின்றன.
உலகிலேயே இந்திய – வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் “ராயல் பெங்காலி புலிகள்” என அழைக்கப்படுகின்றன. அத்துடன் இப்பகுதியில் வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளதால், இங்கு வாழும் புலிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment