ஆபத்தில் இருந்து காக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்புதான். அப்படி நமக்கு ஓர் கஷ்டம் ஏற்படும்போது நாம் சோர்ந்து போகவேண்டாம்; துவண்டுவிடவும் வேண்டாம். சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு, ஆபத்துகளில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.
தேய்பிறை அஷ்டமி
ரௌத்திர வடிவான பைரவ மூர்த்தியின் அவதாரம் எப்போது நிகழ்ந்தது?
அந்தகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் தேவர்களையெல்லாம் துன்புறுத்தி இன்பம் கண்டான். தேவர்களை மட்டுமல்லாமல் முப்போதும் சிவ சிந்தனையில் திளைத்திருக்கும் முனிவர்களையும் விட்டு வைக்கவில்லை. தேவர்களையும், எப்போதும் தன்னையே நினைத்திருக்கும் முனிவர்களையும் துன்புறுத்தும் அந்தகாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். அவரே அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார். மேலும் கர்வம் கொண்ட பிரம்மதேவரின் தலையைக் கொய்தவரும் பைரவர்தான்.
ஒருமுறை தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அழிக்க நினைத்த சிவபெருமான், பிட்சாடன மூர்த்தியாக வடிவம் ஏற்றுச் சென்றார். அவரால் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத முனிவர்கள் சிவபெருமானை அழிக்க முயற்சித்தனர். கடும் கோபம் கொண்ட சிவபெருமான் காலாக்னியால் தாருகாவனத்தை அழித்தார். இதனால் உலகம் முழுக்க இருள் பரவி சூரியனும் மறைந்து போனது. அப்போது பைரவ மூர்த்தியே எட்டுத் திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கினார். இப்படி எட்டுவிதமாகத் தோன்றிய பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று பூமியில் வணங்கப்படுகிறார்கள். ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் என எட்டு பைரவர் மட்டுமின்றி ஆதிசைவர்கள் 64 விதமான பைரவர்களையும் வணங்கி வந்துள்ளார்கள் என புராணங்கள் கூறுகின்றன.
பைரவர்
அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும். பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். இன்னும் சொல்லப்போனால் பைரவரே கோயிலின் காவல் தெய்வமாகவும் இருப்பவர். எல்லா சிவாலயங்களிலும் ஆலயம் திறந்தவுடனும், இரவு கோயில் மூடப்படும்போதும் பைரவ பூஜை செய்வார்கள். சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரியும் இவரே. நாயை வாகனமாகக் கொண்டு அனேகமாக திகம்பரராக காட்சி தருபவர். கால பைரவர், கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பலவாறு ரூபம் கொண்டவர்.
சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர். காசி நகரமே பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அதனால்தான் அங்கு இறப்பவருக்கு மோட்சம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நீலநிற மேனியரான பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர். மண்டை ஓட்டு மாலை அணிந்தவர். சூலம், பாசம், மழு, கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறைநிலவு சூடியவர். பிரம்ம சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆபத்துதாரணர், காலமூர்த்தி, கஞ்சுகன், திகம்பரன் என்று பல திருப்பெயர்கள் பைரவருக்கு இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி யாவும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை. பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது. பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது.
பைரவர்
”
மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்!
அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும். எலுமிச்சம்பழத்த
ை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். கெட்ட அதிர்வுகள் விலகும் என்று சொல்லப்படுகிறது. மன அமைதியே இல்லாதவர்களுக்க
ு பைரவரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
Comments
Post a Comment